டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வை உணர்ந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தினி சவுக் பகுதியில் பேக் விற்பனை செய்யும் கரம்ஜோத் கூறுகையில், “செங்கோட்டை பகுதியிலிருந்து பலர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. நானும் பாதுகாப்புக்காக குருத்வாராவை நோக்கி ஓடி உயிர்தப்பினேன்’’ என்றார்.
இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஜெயின் மந்திர் அருகே வசிக்கும் 45 வயதான கர்மயதா தேவி கூறுகையில், “பூமி குலுங்கியது. நிலநடுக்கம் வந்தது போல் உணர்ந்தேன். என்னுடைய 15 வயது மகன் கார் வெடிப்பில் சிதறிய உடல்களை கண்டு பதறினான். உடலின் சில துண்டுகள் ஜெயின் மந்திர் காம்பவுண்டுவுக்குள் வந்து விழுந்தது’’ என்றார்.














