வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கரையை இன்று நெருங்கக்கூடும். இதன் காரணமாக 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகக் கரையை மேலும் நெருங்கி வரக்கூடும்.
இதன் காரணமாக இன்று வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 25-ம் தேதி வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 26-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 27-ம் தேதி ஒருசில இடங்களிலும், 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 5 செ.மீ, சிவகாசியில் 4 செ.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், மதுரை மாவட்டம் பேரையூர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ, சேலம் மாவட்டம் எடப்பாடி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














