சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாளுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.அழகிரி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து தாயாரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள்(92). வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வரின் சகோதரருமான மு.க.அழகிரி ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு வந்து தாயாரைச் சந்தித்தனர். பின்னர், தாயாரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
தயாளு அம்மாள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சில தினங்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.














