டேனிஷ் மாலேவர் சதம்; விதர்பா அணி 254 ரன் சேர்ப்பு

0
133

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரளா அணிக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டேனிஷ் மாலேவர் சதம் விளாசி அசத்தினார்.

நாக்பூரில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரளா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய விதர்பா அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பார்த் ரேகாடே 0, தர்ஷன் நல்கண்டே 1 ரன்னில் நித்தீஷ் பந்தில் ஆட்டமிழந்தனர். துருஷ் ஷோரே 16 ரன்னில் ஈடன் ஆப்பிள் டாம் பந்தில் பந்தில் வெளியேறினார். 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் டேனிஷ் மாலேவர், கருண் நாயர் ஜோடி அற்புதமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

டேனிஷ் மாலேவர் 168 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். முதல்தர கிரிக்கெட் போட்டியில் இது அவரது 2-வது சதமாக அமைந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய கருண் நாயர் 125 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடி வந்த கருண் நாயர் 188 பந்துகளில், 86 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு டேனிஷ் மாலேவர், கருண் நாயர் ஜோடி 414 பந்துகளில் 215 ரன்கள் சேர்த்தது.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் விதர்பா அணி 86 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டேனிஷ் மாலேவர் 259 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 138 ரன்களும் யாஷ் தாக்குர் 5 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது விதர்பா அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here