சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட மக்கள்

0
21

 ஈ​ரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​தும் போரால், காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களை காஸ் சிலிண்டர் கேட்டு பொது​மக்​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்​ரேல் நாடு​கள் நடத்​தி வரும் தீவிர தாக்​குதல் காரணமாக,ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் மூடியது. இதனால், இந்​தியா உள்பட பல்​வேறு நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் தடைப்​பட்​டுள்​ளது.

இதனால், சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் மற்​றும் சமையல் எரி​வா​யுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ளது. இதற்கிடை​யில், தொழில் மற்​றும் வணிக நிறு​வனங்​களுக்​கான காஸ் சிலிண்டர் விநி​யோகம் தற்​காலிக​மாக நிறுத்​தப்​படு​வ​தாக எண்​ணெய் நிறு​வனம் தரப்​பில் அறிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, சென்​னை​யில் பல இடங்​களில் உணவகங்​கள், தேநீர் கடைகள் மூடப்​பட்​டன. சில உணவகங்​களில், வெரைட்டி ரைஸை குறைத்​து, ஒரு சில உணவு​கள் மட்​டும் வழங்​கப்​படு​கின்​றன

ஏஜென்சி அலு​வலங்​கள் முற்​றுகை

இதற்​கிடை​யில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் கேட்​டு, சென்​னை​யில் பல்​வேறு இடங்​களில் உள்ள எண்​ணெய் நிறு​வனங்​களின் ஏஜென்சி அலு​வலங்​களை பொது​மக்​கள் நேற்று முற்​றுகை​யிட்​டனர்.

காஸ் சிலிண்டர் முன்​ப​திவு செய்து ஒரு வாரம் கடந்​தும் வரவில்லை என்​றும், சிலிண்டர் பதிவு செய்ய முடிய​வில்லை என்​றும் தெரி​வித்​து, தகராறில் ஈடு​பட்​டனர்.

இது தொடர்​பாக, ஏஜென்சி நிர்​வாகி கூறுகை​யில், “காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு பீதி​யால், ஒரு நேரத்​தில் பலர் பதிவு செய்ய முயல்​கின்​றனர். இது தோல்வி அடைந்​த​தால், அலு​வலத்தை முற்​றுகை​யிடு​கின்​றனர்.

ஒரு சிலிண்டர் வழங்​கி, அடுத்த சிலிண்​டரை 25 நாள்​களுக்கு பிறகு வழங்​கப்​படும். எண்​ணெய் நிறு​வனங்​கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை தொடர்ச்​சி​யாக வழங்​கு​கின்​றன” என்​றார்.

காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மயிலாப்பூரில் காஸ் நிரப்பும் நிலையங்களில் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சிஎன்ஜி காஸ் மையங்​கள் மூடல்

காஸ் சிலிண்டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சென்​னை​யில் கோடம்​பாக்​கம், வடபழனி உள்பட பல்​வேறு இடங்​களில் ஆட்டோ உள்பட சிறிய ரக வாக​னங்​களுக்கு காஸ் நிரப்​பும் மையங்​கள் மூடப்​பட்​டன. சில இடங்​களில் உள்ள காஸ் நிரப்​பும் மையங்​களில் நீண்ட நேரம் காத்​திருக்க வேண்​டிய நிலை ஏற்​படு​கிறது.

அகில இந்​திய எல்​பிஜி சங்க இணை செய​லா​ளர் வசந்த் கூறிய​தாவது: வீட்டு உபயோகத்​துக்​கான காஸ் சிலிண்டர் வழக்​கம் போல் விநி​யோகம் செய்​கிறோம். வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்டர் கடந்த 9-ம் தேதி முதல் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதே​நேரத்​தில், மருத்​து​வ​மனை, கல்வி நிலை​யங்​களுக்கு அளவுடன் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் இருப்பு இருப்​ப​தாக எண்​ணெய் நிறு​வனங்​கள் தெரி​வித்​துள்​ளன. அடுத்த கப்​பல் மார்ச் 25-ம் தேதி வரு​கிறது. அதன்​பிறகு, இப்​பிரச்​சினை ஓரளவு சீராகும் என எதிர்​பார்க்​கிறோம்.

காஸ் சிலிண்டர் 60 சதவீதம் வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. உள்​நாட்டு உற்​பத்​தியை 45 முதல் 65 சதவீதம்​ வரை அதி​கரிக்​க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறினார்.

மின்சார அடுப்புக்கு மவுசு

இதற்கிடையே, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, இல்​லத்​தரசிகளின் கவனம் மின்​சார அடுப்​பு​களின் பக்​கம் திரும்​பி​யுள்​ளது. இதனால் கடந்த 3 நாட்​களாக ஆன்​லைன் வர்த்​தகத் தளங்​களில் மின்​சார அடுப்​பு​களுக்கு மவுசு கூடி, அதை வாங்​கு​வோர் எண்​ணிக்கை பல மடங்கு அதி​கரித்​துள்​ளது. இந்த திடீர் தேவை​யால், கடைகளிலும் மின்​சார அடுப்​பு​களை பலரும் வாங்கி வரு​கின்​றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை,புறநகர் பகுதிகளில் உள்ள சில தனியார் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here