ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23-ம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சீசனுக்கு தயாராகும் விதமாக சிஎஸ்கே அணி வீரர்கள் 10 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பயிற்சி முகாம் சென்னை நாவலூரில் உள்ள சிஎஸ்கே உயர்மட்ட செயல் திறன் மையத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்குகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர், வெளியே வரும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
பயிற்சி முகாமில் தோனியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, ஆந்த்ரே சித்தார்த், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ், வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, கமலேஷ் நாகர்கோட்டி, முகேஷ் சவுத்ரி, அன்சுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.