ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்

0
89

 கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை அவர் இறுதிப் போட்டி வரை கேப்டனாக வழிநடத்தி முன்னேற செய்துள்ளார்.

19 வயதான அவர் தென் ஆப்பிரிக்காவின் அபார விளையாட்டு திறன் படைத்த இளம் வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். கிரிக்கெட் மற்றும் ரக்பி என இரண்டு விளையாட்டுகளில் அசத்தி வரும் அவர் இப்போது தலைப்பு செய்தியாகி கவனம் ஈர்த்துள்ளார்.

2024-ல் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை தொடரில் தனது ஆல்ரவுண்டர் திறனை நார்டன் வெளிப்படுத்தி இருந்தார். வேகப்பந்து வீச்சாளரான அவர், அந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். பேட்ஸ்மேனாக 50 ரன்களை சராசரியாக கொண்டிருந்தார். மூன்று இன்னிங்ஸில் ஒரே ஒரு முறை மட்டுமே ஆட்டமிழந்தார். கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி அரை இறுதி ஆட்டம் வரை யு19 உலகக் கோப்பை தொடரில் முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது தனது அப்பா கிறிஸ் நார்டன் பாணியில் ரக்பி விளையாட்டிலும் முத்திரை படைத்து வருகிறார். சிறு வயது முதலே கிரிக்கெட் மற்றும் ரக்பி என இரண்டிலும் பயிற்சி பெற்றுள்ளார் ரைலி நார்டன்.

அவரது தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ரக்பி யு20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. அர்ஜென்டினாவை அரை இறுதியில் வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.

இளம் வயதில் தனது விளையாட்டு திறன் மூலம் கிரிக்கெட் மற்றும் ரக்பியில் அசத்தி வரும் ரைலி நார்டன் தென் ஆப்பிரிக்காவுக்கு நம்பிக்கை தரும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here