மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இருமல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, தமிழக அரசு கடந்த வாரம் முதலே இந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டதுடன், ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்யத் தடை விதித்து, மருந்து இருப்புகளை அகற்றவும் உத்தரவிட்டது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.
இதனிடையே, மத்தியப் பிரதேச சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று சுங்குவார்சத்திரம் வந்தனர். மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளையும், உள்ளூர் காவலர்களையும் அவர்கள் தொடர்பு கொண்டனர். இதன் தொடர்ச்சியாகவே, ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னணி என்ன? – மத்திய பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து காரணமாக முதல் குழந்தை உயிரிழந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சில குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தன. மொத்தம் 20 குழந்தைகள் அங்கு உயிரிழந்தன.
சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் இருமல் சிரப் உள்ளிட்ட வழக்கமான மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அந்த மருந்தை எடுத்துக்கொண்ட பின்பு சில நாட்களுக்குள் அந்த குழந்தைகளுக்கு சிறுநீர் வெளியேறுவது குறைந்தது. இதையடுத்து, அவர்களுக்கு சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டயாலிசிஸ் கிகிச்சை தொடங்கிய சில நாட்களுக்குள் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தனர்.
உயிரிழந்த குழந்தைகளில் சிலர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், குழந்தைகளின் சிறுநீரகங்களில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது, விஷத்துடன் தொடர்புடைய ஒரு வகை நச்சு ரசாயனமாகும். விசாரணையில் அந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மற்றும் நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் சிரப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த கோல்ட்ரிப் என்ற இருமல் சிரப்பை அக்டோபர் 2-ம் தேதி, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதித்ததில் அந்த மாதிரியில் கலப்படம் இருப்பதாக அறிவித்தனர். அதன்பின், அந்த ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.