மதுபான கொள்கையில் நடந்ததாத கூறப்படும் ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல், அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது முதல்வராக பூபேஷ் பாகெல் இருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2019 முதல் 2023-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,161 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகெல் வீடு, அவரது மகன் சைதன்யா பாகெல் ஆகியோரது வீடுகளில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை முதலே இந்த சோதனை நடைபெற்றது.
மேலும், பிலாய் பத்மநகரிலுள்ள சைதன்யா பாகெல், பூபேஷ் பாகெல் வீடு உட்பட சத்தீஸ்கரின் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை நடந்தபோது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
மதுபான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் 15 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பூபேஷ் பாகெலின் மகன், சைதன்யா பாகெல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயத்திலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: அமலாக்கத்துறையினர் பொய் வழக்குப் போட்டு பூபேஷ் பாகெலை சிக்க வைக்க முயல்கின்றனர். இதுதொடர்பான வழக்கை நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது














