தொடரும் கனமழை: அரியலூர், பெரம்பலூர், கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

0
202

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.13) விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

காரைக்கால், மயிலாடுதுறையில்.. தொடர்மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்தார்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை.. முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தற்போது வடதமிழகம், தெற்கு ஆந்திரகடற்கரை பகுதிக்கு அப்பால் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட கடலோரம், தென் தமிழகம்,மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை. மேற்கு திசையில் நகர்ந்து,மெதுவாக கரையைகடந்து செல்லும். சென்னை மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தற்போதுள்ள மழையின் அளவிலேயே தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here