நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் பிரபல நடிகர் துல்கர் சல்மான், கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக இருக்கிறார்.
அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவனம் ஒன்றின் ஊழியர் பி.என். ஜெயராஜன் என்பவர், நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “திருமண விழாவுக்காக, குறிப்பிட்ட பிராண்டின் 50 கிலோ பிரியாணி அரிசியை, ஆகஸ்ட் மாதம் வாங்கினோம்.
அதில், அந்த அரிசி எப்போது பேக் செய்யப்பட்டது, காலாவதி தேதி உள்ளிட்ட எதுவும் இல்லை. அதில் சமைத்த பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர், விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான், அரிசியை விற்ற கடை உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மேலும் இப்பிரச்சினை காரணமாகத் தனது கேட்டரிங் தொழிலின் நம்பகத்தன்மை பாதித்துவிட்டதாகவும் பல திருமண முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு துல்கர் சல்மான், அரிசி நிறுவன உரிமையாளர் ஆகியோர் டிச.3-ம் தேதி நேரில் ஆஜராக நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.














