ஜெய்ப்பூரைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற வழக்கறிஞர், மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், ‘‘பிரபல நடிகர்களான ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோர் பான் மசாலா விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த பான் மசாலாவில், குங்குமப் பூவின் சக்தி இருப்பதாக விளம்பரத்தில் கூறப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால், பான் மசாலா ரூ.5 -க்கு விற்கப்படுகிறது. எனவே இதில் குங்குமப்பூ கலப்பதற்கான வாய்ப்பு குறைவு. தவறான தகவலைப் பரப்பி மக்களை ஏமாற்றும் பான் மசாலா நிறுவனம், அதன் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த ஆணையம், பான் மசாலா நிறுவனமான ஜேபி இண்டஸ்ட்ரிஸ் சேர்மன் விமல் குமார் அகர்வால், நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வரும் 19-ம் தேதி விமல் குமார் அகர்வால் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.