பாரத் நெட் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 11,507 கிராம பஞ்சாயத்துகள் இணைப்பு: அமைச்சர் பிடிஆர் தகவல்

0
155

தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் மூலம் 11,507 கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரத் நெட்’ திட்டம், இந்தியாவின் அனைத்து கிராமங்களையும், கிராம பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் முறையில் இணைப்பதற்கான பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

அதன்படி, நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் இணைத்து, அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 ஜிபிபிஎஸ் அளவிலான அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அந்தவகையில் தமிழத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பாரத் நெட்’ திட்டத்துக்கான 2-ம் கட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.1,815.31 கோடியில் இணைய இணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் 57,500 கி.மீ நீளத்துக்கு ஆப்டிகல் ஃபைபர் பதிக்கும் பணிகள், தமிழக அரசின் கீழ் செயல்படும் சிறப்பு நோக்கு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டம் மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் 91.8 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதன்படி இதுவரை மொத்தம் 11,507 கிராம பஞ்சாயத்துகள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அதிவேக இணைய சேவையைப் பெற்று வருகின்றன.

இந்த கிராமங்களில் 48,082 கி.மீ தொலைவுக்கு உயர்மட்டக் கம்பத்தின் வழியாகவும், 5,107 கி.மீ தொலைவுக்கு நிலத்தடி ஆப்டிகல் ஃபைபர் வழியாகவும் ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here