சம்பல் பகுதியை பார்வையிட சென்ற காங்கிரஸார் – போலீஸார் தள்ளுமுள்ளு

0
178

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சம்பலில் ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்யச் சென்ற தொல்லியல் துறையினருக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், வன்முறை பாதித்த சம்பல் பகுதியை பார்வையிட காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு லக்னோவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அஜய் ராய் தலைமையில் ஒன்றுகூடினர். சம்பல் பகுதியை நோக்கி காங்கிரஸார் புறப்பட தயாரான போது போலீஸார் தடுப்புகளை வேலிகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, அஜய் ராய்க்கு போலீஸார் அனுப்பிய நோட்டீஸில், சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வெளியாட்கள் ஊருக்குள் நுழைய டிசம்பர் 10-ம் தேதி வரை தடை அமலில் உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியின் சம்பலை பார்வையிடும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என போலீஸார் அந்த நோட்டீஸில் வலியுறுத்தி இருந்தனர்.

ஆனால், சம்பலில் காவல்துறை மற்றும் அரசு ஆகியவை இணைந்து நடத்திய அட்டூழியத்தை அறிய காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. இதற்காக, அங்கு அமைதியான முறையில் செல்வோம் என்று அஜய் ராய் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here