அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

0
216

அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை (டிச.24) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் ஏ.செல்லக்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற விவாதத்தின்போது அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா கேலியாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட பிறகு அது தொடர்பான இறுதிக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது, காங்கிரஸ் மட்டும் இல்லாவிட்டால் இந்த சட்டத்தை விரைவாகவும் உரிய சீர்திருத்தங்களுடனும் வடிவமைத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பற்றி அமித் ஷாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே அமித் ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக் கோரியும் நாடு முழுவதும் நாளை (டிச. 24) மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். அப்போது அமித்ஷாவை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் அளிப்பார்கள். முன்னதாக அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் செல்வார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here