இஸ்லாமியர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாகவும் இருந்தும், இஸ்லாமியர்கள் அக்கட்சியை கண்மூடித்தனமாக நம்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார்.
பாஜக செயற்குழு கூட்டம் மத்திய பிரதேச மாநிலத்தின் நிவாரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று பேசினார்.
“இஸ்லாம் சமூகத்தின் வாக்குளை பெற்றுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஆனால், அவர்களின் வளர்ச்சிக்காக அந்த கட்சி ஒருபோதும் பணியாற்றியது இல்லை. இஸ்லாமியர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது.
இஸ்லாமிய சமூகத்தினர் காங்கிரஸ் கட்சியை கண்மூடித்தனமாக நம்புகின்றனர். ஆனால், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களை ஒருவருக்கொருவர் எதிராக இருக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு இருந்துள்ளது. வந்தே மாதரம் பாடலின் சில பகுதிகளை தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி எதிர்த்துள்ளது” என்று அவர் பேசினார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என்ற 1937-ஆம் ஆண்டு தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஆகஸ்ட் 19, 2026 அன்று காங்கிரஸ் செயற்குழு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக, ‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதுமாக பாட வேண்டுமென்ற மசோதாவை கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
