காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

0
207

இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று தான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: இந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாக சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு முதலில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியும். நேற்று நீங்கள் காணொளியில் கூறிய பொய்யையே மீண்டும் எழுத்து வடிவில் கூறுவதால் அது உண்மையாகி விடாது.

நகர்ப்புற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைக் கொண்டு வருவதுதானே நியாயமான சமூக நீதி. பத்து வருடமாக அரசுப் பள்ளிக் கல்வித் திட்டத்தை மாற்றவில்லை என்று கூற உங்களுக்கும் வெட்கமில்லை. உங்கள் கூட்டணிக் கட்சி திமுகவுக்கும் வெட்கமில்லை. இன்னும் எத்தனை ஆண்டு காலம், திராவிடத்தின் பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் பாடமாகப் படிக்க வேண்டும்?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகன் தொடங்கி, அனைத்து திமுகவினர் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் நலனுக்காக ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தாமல், இரட்டை வேடம் போட்டு, அவர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவர்கள் தயவால் பெற்ற பதவியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் தளத்தில், ‘இந்தி மொழி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறாததற்கு காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், யுபிஎஸ்சி தேர்வில் தமிழ் மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெறுவதற்கு பாஜக அரசின் கல்வி மாற்றங்களே காரணம்’ என எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here