சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன்குமாருக்கு (79) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. டெல்லியில் மட்டும் 2,800 பேர் உயிரிழந்தனர். டெல்லி உட்பட நாடு முழுவதும் 3,350 பேர் உயிரிழந்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் தலைநகர் டெல்லியில் சீக்கிய கலவரத்தை முன்னிறுத்தி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது 3 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முதல் வழக்கில் ஆயுள்: டெல்லி பாலம் காலனியில் 5 சீக்கியர்களை கொலை செய்தது தொடர்பாக அவர் மீது முதல் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.ஆயுள் தண்டனைக்கு எதிரான அவரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
2-வது வழக்கில் விடுதலை: டெல்லி சுல்தான்புரியில் 3 சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சஜ்ஜன் குமார் மீது 2-வது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டார்.
3-ம் வழக்கில் ஆயுள்: 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தின்போது டெல்லி சரஸ்வதி விகாரில் சீக்கியரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த 1991-ம் ஆண்டு சஜ்ஜன் குமார் மீது 3-வது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரித்து வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டில் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி சஜ்ஜன் குமார் கைது செய்யப்பட்டார். கடந்த 2021 மே 5-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் இறுதி விசாரணை தொடங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 12-ம் தேதி சஜ்ஜன் குமார் குற்றவாளி என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி காவேரி பவேஜா நேற்று அறிவித்தார். அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் மரண தண்டனை விதிக்க கோரப்பட்டது. இதை நீதிபதி ஏற்கவில்லை.
சீக்கியர் கலவரம் நடைபெற்று சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. காலம் கடந்த நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று சீக்கிய அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.