ஐயுஎம்எல் கட்சித் தலைவர் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சந்தீப் ஜி வாரியர் இரு தினங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவர் பனக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல் ஜமாத்-இ-இஸ்லாமி (தீவிரவாத) இயக்கத்தைச் சேர்ந்தவர் போல செயல்படுகிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார்.
மேலும், முன்னாள் பாஜக தலைவர் ஒருவர் (வாரியர்) காங்கிரஸில் சேர்வதற்கு முன்பு ஐயுஎம்எல் மூத்த தலைவர்களை சந்தித்தார். எனவே, அவர் காங்கிரஸில் சேர்ந்ததை ஐயுஎம்எல் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் விஜயன் குற்றம்சாட்டினார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஐயுஎம்எல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஐயுஎம்எல் சார்பில் வெளியாகும் சந்திரிகா நாளிதழில் இது தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், “மதநல்லிணக்கத்தின் தூதர் என பனக்காடு தங்கலை கேரள மக்கள் அன்புடன் அழைக்கின்றனர். எனவே, கேரள முதல்வர் தன்னுடைய சொந்தக் கருத்தை எல்லாம் தெரிவிக்கக் கூடாது. பினராயி விஜயனும் அவருடைய கட்சியும் மதவாத சக்திகளுடன் நெருங்கிய உறவு வைத்திருப்பதை உணர்த்துவதாக அவரது கருத்து உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலக்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடத்தில் கூறும்போது, “பாஜக மாநில தலைவர் கூற வேண்டிய கருத்துகளை எல்லாம் முதல்வர் கூறுகிறார். இதன்மூலம் அவர் ஒரு சங்கி என்பதை அவர் நிரூபித்துள்ளார்” என்றார்.














