ஆளும் கட்சியின் கடலோர மாவட்ட தலைமைப் புள்ளிக்கும் ‘ராஜ’ மந்திரிக்கும் ஆரம்பத்திருந்தே ஒத்துப்போகவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தை ‘ராஜ’ மந்திரி ‘குறுக்கு வழியில்’ கோல் போட்டு தட்டிப்பறித்து விட்டதாக மாவட்டப் புள்ளிக்கு மனங்கொள்ளா வருத்தம். இந்தக் கசப்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு இருவரும் முஷ்டி தூக்கி நிற்பதால் கழகத்தினரும் இரு பிரிவாக நின்று இம்சை செய்கிறார்களாம்.
மாவட்டப் புள்ளி தனக்கும் ‘எஸ்கார்ட்’ போக்குவரத்து அமையும் அந்தஸ்து வரும் என மூன்று முறை கனவு கண்டாராம். ஆனால் அது, பகல் கனவாகவே போய்விட்டதாம். இனி, கனவுக்கும் வழியில்லை என்பதால் இந்த தடவையாச்சும் நம்ம நினைக்கிறது நடந்தே தீரணும் என தனது விசுவாச மக்களிடம் பேசி வருகிறாராம்.
எப்படியும் ‘ராஜ’ மந்திரி தனக்கு போட்டியாக வருவார் என்பதால் தான் கடந்த முறையே தொகுதியில் அவருக்கு ‘சிறப்பாக’ தேர்தல் பணி செய்ய தனது ஆட்களுக்கு ‘அசைன்மென்ட்’ கொடுத்திருந்தாராம் முக்கிய புள்ளி. அப்படியும், தான் நினைத்தது நடக்காமல் போனதால், “இந்தத் தடவையாச்சும் செய்யுறத செவ்வையா செஞ்சுவிடுங்கப்பா” என்று கழகத்தினரிடம் கண்ணடித்து வருகிறாராம்.
ஒருவரை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கையில, கட்சி மாறி வந்த முன்னாள் ‘சுந்தர’ மந்திரி ஒருவரும் இப்போது மாவட்டப் புள்ளியின் தூக்கத்தை பறிக்க ஆரம்பித்திருக்கிறாராம். ஒருவேளை, இந்த முறை தலைமை அவருக்கு ’குடி’ தொகுதியை தந்தாலும் தருமோ என முன்கூட்டியே அலெர்ட் ஆகும் மாவட்டப் புள்ளி, ’குடி’ தொகுதிக்கு தனது ‘கைபாணம்’ ஒருவரை தயார்படுத்தி வருவதாகத் தகவல்.














