“கூட்டணி ஆட்சியே மாநில வளர்ச்சிக்கு நல்லது” – பாமக வழக்கறிஞர் பாலு நேர்காணல்

0
14

பாமக துவங்கிய காலம்தொட்டு அக்கட்சியின் சட்டப்பிரிவின் முகமாக இருப்பவர் வழக்கறிஞர் பாலு. தந்தையா – மகனா என்ற இக்கட்டான சூழ்நிலையில் கட்சி தவித்துவரும் நிலையில், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சட்டச் சிக்கல்களை பாமக சந்தித்து வருகிறது. சட்டப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவரும் கட்சியின் செய்தி தொடர்பாளருமான பாலு நம்மிடம் பேசியதிலிருந்து…

பாமகவில் இத்தனை காலம் பணியாற்றிய நீங்கள் கட்சி நிறுவனரையே பகைத்து கொண்டு அன்புமணி பக்கம் சேரக் காரணம்?

ராமதாஸ் வயது மூப்பை காரணமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிலரின் கைப்பிடியில் அவர் சிக்கியுள்ளார். பாமகவை அன்புமணியால் தான் எதிர்காலத்தில் வழிநடத்த முடியும் என்பதால், இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.

ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல விரும்புவதாக சொல்லப்படுகிறதே? அன்புமணி எந்த கூட்டணிக்கு செல்ல திட்டமிடுள்ளார்?

பாமகவின் எதிர்காலம், கூட்டணி பற்றி அன்புமணி தான் முடிவு செய்வார். கூட்டணியை அவர் தான் அறிவிப்பார். அவருக்கு தான் அதிகாரம் உள்ளது.

அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டாரா?

பாமக எப்போதும் கடைசி கட்டத்தில் கூட்டணியை முடிவு செய்து வந்துள்ளது. அது சரியாக வராது என்பதால், முன்கூட்டியே கூட்டணியை முடிவு செய்ய இருக்கிறோம்.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு பாமக செல்லுமா? அல்லது தவெக தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் பாமக சேருமா?

ஒவ்வொரு தேர்தலின் போது, தேர்தலுக்கு ஏற்ற வகையில் எங்களது கூட்டணியை முடிவு செய்வோம். எங்கள் கட்சியின் தலைவர் அன்புமணி பொதுக்குழுவை கூட்டி கூட்டணியை முடிவு செய்வார். அதுவும் விரைவில் நடக்கும்.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் போட்டியிடும் இடங்கள், வன்னியர் இட ஒதுக்கீடு, வெற்றிவாய்ப்பு இதில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கூட்டணியை முடிவு செய்வீர்கள்?

வெற்றி பெறக்கூடிய இடங்களை முதன்மையாக வைத்து தான் நாங்கள் கூட்டணியை உறுதி செய்வோம். அந்த இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்றுவிட முடியும்.

கூட்டணி சேரும் போது, பாமக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்குமா?

கூட்டணியில் இருக்கும் அனைவரும் இணைந்து ஆட்சி அமைப்பது, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அனைத்து பிரிவினருக்கும் நல்லது. ஆட்சியில் பங்கு என்பது குறித்து தேர்தல் முடிந்த பிறகு தான் நாங்கள் முடிவு செய்வோம்.

பாமக இரண்டு பிரிவாக செயல்படுவது கட்சிக்கு பலவீனம் தானே? தேர்தலை எப்படி சமாளிப்பீர்கள்?

பாமக இரண்டு பிரிவு அல்ல. இப்போது பாமக அன்புமணியின் கட்டுப்பாட்டிலும், அதிகாரத்திலும் தான் உள்ளது. பாமக தலைவராக அவர் தான் இருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் அவருக்கு தான் உள்ளது. கட்சி சின்னம் ஒதுக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தலைமை அலுவலகம் உள்ளது. பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏ.க்கள் அவருடன் தான் உள்ளனர்.

ராமதாஸ், அன்புமணி இருவரும் கட்சிக்கு சொந்தம் கொண்டாடும் போது, நீதிமன்றத்தில் தானே இறுதி முடிவு தெரியும்? அதுவரை கட்சியை எப்படி நடத்துவீர்கள்?

ஒரு கட்சியின் அங்கீகாரத்தை தீர்மானிப்பது தேர்தல் ஆணையம். கட்சியின் விதிகளின்படி தலைவர், செயலாளர், பொருளாளருக்கு என்ன அதிகாரம் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் அதிகாரம், இதனை அடிப்படியாக வைத்துதான் நீதிமன்றம் தலையிடும். அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றார்கள். அதில் தோல்வி அடைந்தார்கள். நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

தேர்தல் ஆணையத்தில் தற்காலிகமாக கொடுத்த கடிதத்தை காட்டி, கட்சி உங்கள் பக்கம் இருப்பதாக நீங்கள் ஏமாற்றுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி?

பிரச்சினை உருவானதற்கு பிறகு இரு தரப்பும் பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் ஆணையத்தை அணுகியது. தேர்தல் ஆணையம், அன்புமணி தலைமையிலான பாமக நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, கட்சியின் தலைவருக்கான காலத்தை 2026 ஆகஸ்ட் மாதம் வரை கால நீட்டிப்பு செய்துள்ளது. அதன் பிறகு கட்சியின் தலைவரால் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். அடுத்து வரக்கூடிய நிர்வாகிகளுக்கான ஒப்புதல், அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். இது இடைக்காலம் அல்ல. நிரந்தரமானது.

ராமதாஸ் – அன்புமணி பிரிவுக்கு வேறு சதி இருப்பதாக சொல்வதில் உண்மை இருக்கிறதா?

ராமதாஸை சுற்றி சதி வலை பின்னப்பட்டுள்ளது. அந்த சதி வலையில் ராமதாஸ் சிக்கியுள்ளார். இருவருக்கும் இடையேயான பிரிவு என்பது தற்செயலாகவோ, திடீரென்று ஏற்பட்ட சிறிய பிரச்சினையாலோ உருவானது அல்ல. இன்றைக்கு கட்சியின் செயல் தலைவராக காந்தி என்பவரை அறிவிப்பதிலேயே, மிகப்பெரிய சதி அன்புமணிக்கு எதிராக கட்டமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.

அன்புமணியை கட்சி தலைமையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். ராமதாஸ் வயது மூப்பை பயன்படுத்தி, அவருடன் இருக்கக்கூடிய சதிகாரர்களின் சதி வலையால் இது நடக்கிறது. அந்த சதியை முறியடித்துள்ளோம். அன்புமணி இல்லாமல் பாமகவை, ராமதாஸ் காலத்துக்கு பிறகு வழி நடத்த முடியுமா. கட்சியை பலவீனப்படுத்தும் பணியை, கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்யலாமா?

இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணைந்து ஒன்றுபட்ட பாமக உருவாக வாய்ப்புள்ளதா?

அதற்கான சாத்தியக்கூறுங்கள் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருவது மாதிரி தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here