பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட 21.37 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு பிரிவில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கு சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கு முடிவு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ஒரு பகுதி குடியிருப்புப் பயன்பாட்டுக்கும், ஒரு பகுதி நிறுவனப் பயன்பாட்டுக்கும், மற்றொரு பகுதி திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கும் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கான வகைப்பாட்டுக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) விண்ணப்பிக்கப்பட்டது. இதுசார்ந்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிந்த நிலையில், கடந்த அக்.1-ல் சிஎம்டிஏ அலுவலகத்தில் தொழில் நுட்பக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. அதில், பட்டினப்பாக்கம் நில வகைப்பாடு மாற்ற கோப்புகளை, குழும கூட்டத்துக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சிஎம்டிஏவின் 289-வது குழுமக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலக திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 25.55 ஏக்கரில், 21.37 ஏக்கர் நிலங்களின் வகைப்பாட்டை மட்டும் மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தலைமைச் செயலக திட்டம் உள்பட 44 இடங்களில் நில வகைப்பாடு மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன், நிர்வாக நடைமுறை தொடர்பான 28 கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
