இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருக்கலாம், ஆனால் அவரது வசீகரமும் நகைச்சுவை உணர்வும் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பங்கேற்ற ரோஹித் சர்மா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்தியாவின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் அருகில் அமர்ந்திருந்தார் ரோஹித் சர்மா. அப்போது அவர்களை, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்து சென்றார். அந்த நேரத்தில் ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் ஐயருடன் ஏதோ கூறியபடி சிரித்தார்.
சில நிமிடங்கள் கழித்து, 38 வயதான ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சனின் நடையை போன்று செய்து காண்பித்தார். ரோபோ அசைவுகளுடன் ரோஹித் சர்மா செய்து காண்பித்த விதமும் அங்கிருந்த கேமராக்களில் பதிவானது. அவரது இந்த விளையாட்டுத்தனமான செயல் சமூக வலைதங்களில் வைரலாகி உள்ளது. ரசிகர்கள் அதை “கிளாசிக் ரோஹித் நகைச்சுவை” என்று அழைத்து வருகின்றனர்.
முன்னதாக இதே விழாவில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியைப் போலவே ஒரு மிமிக்ரி கலைஞர் செய்து காண்பித்த போது ரோஹித் சர்மா தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைளதங்களில் ரசிகர்களின் மனதை வென்றது.