ஐபிஎல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியையும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியையும் வீழ்த்திருந்தது. இதில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் விளாசி வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளில் 90 ரன்களை விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார் சமீர் ரிஸ்வி. இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் ஆட்டத்தில் டக் அவுட் ஆன நிலையில், மும்பைக்கு எதிராக 1 ரன்னில் நடையை கட்டியிருந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான பதும் நிசங்கா முதல் ஆட்டத்தில் 1 ரன்னில் வெளியேறிய நிலையில் கடந்த ஆட்டத்தில் 40 ரன்கள் சேர்த்திருந்தார். இது அவருக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடும். 3-வது வரிசையில் களமிறங்கிய நித்திஷ் ராணாவிடம் இருந்தும் பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டர் சரிவுக்கு டெல்லி அணிக்கு தீர்வு காண முயற்சிக்கக்கூடும்.
பந்துவீச்சில் முகேஷ் குமார், லுங்கி நிகிடி, டி.நடராஜன், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடி 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வீழ்ந்திருந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டு இருந்தது.
நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் பலவீனமாக உள்ளது அணியின் செயல் திறனை பாதித்துள்ளது. கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாட்டியா உள்ளிட்டோரிடம் இருந்து தாக்கக்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. எனினும் கடந்த ஆட்டத்தில் 73 ரன்கள் விளாசிய தொடக்க வீரரான சாய் சுதர்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.
ஜாஸ் பட்லரும் அதிரடி பார்முக்கு திரும்புவது அவசியம். கடந்த ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக களமிறங்காத ஷுப்மன் கில் முழு உடற்தகுதியை எட்டி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். இது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற வேண்டுமானால் அனைத்து துறையிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.














