உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி: சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம்

0
251

அதிபர்கள் ட்ரம்ப், புதின், ஜெலன்ஸ்கி என உலகத் தலைவர்கள் அனைவரிடமும் பேசக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் மோடி என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா – சிலி இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபான்ட் 5 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி இந்தியா வந்தார். டெல்லி, ஆக்ரா, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அவர் செல்கிறார். டெல்லியில் உள்ள குடியரசு தின மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கேப்ரியல் போரிக் பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு தற்போது வித்தியாசமான அந்தஸ்து உள்ளது. உலகில் உள்ள எந்த தலைவர்களுடனும் அவரால் பேச முடியும். அதிபர்கள் புதின், ட்ரம்ப், ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன், லத்தின் அமெரிக்கா, ஈரான் உட்பட பல நாடுகளின் தலைவர்களுடன் அவரால் பேச முடியும். மற்ற தலைவர்கள் செய்ய முடியாததை பிரதமர் மோடியால் செய்ய முடியும். தற்போது, உலக அரசியல் அரங்கில் அவர் முக்கிய பங்காற்றுகிறார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. ஏழ்மை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா பேராடுகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் சிலி தொடர்பில் உள்ளது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்திருப்பதில்லை. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, லத்தின் அமெரிக்கா, ஆசியா பசபிக், ஜப்பான், ஆஸ்திரேலியா என அனைத்து நாடுகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். இந்தியாவுடன் உறவை மேம்படுத்துவதில் நாங்கள் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தியா – சிலி இடையே ஏற்கெனவே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இவ்வாறு கேப்ரியல் போரிக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here