Home Uncategorized பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குழந்தை திருமணத்துக்கு தடை – புதிய சட்டம் சொல்வது என்ன?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குழந்தை திருமணத்துக்கு தடை – புதிய சட்டம் சொல்வது என்ன?

0

இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்வதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா அந்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா கடந்த 27-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி இன்று தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்ரி ரெஹ்மான், “இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். குடியரசு தலைவர் மாளிகை இதனை அறிவித்துள்ளது.

குழந்தை திருமணங்களுக்கு எதிரான முக்கியமான சட்டத்தை இயற்றுவதில் பாகிஸ்தான் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பல்வேறு பிரிவுகளின் எதிர்ப்பையும் மீறி மசோதாவுக்கு குடியரசு தலைவர் சர்தாரி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். குழந்தை திருமண தடை மசோதாவில் கையெழுத்திட்டது பாகிஸ்தானில் சீர்திருத்தங்களுக்கான புதிய சகாப்தத்தின் அடையாளமாகும்.

இந்த மசோதா வெறும் சட்டம் மட்டுமல்ல, நமது பெண்களுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வளமான வாழ்க்கைக்கான உரிமை உள்ளது என்பதற்கான உறுதிமொழியாகும். மசோதாவுக்கு ஆதரவளித்ததற்காக பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி, கட்சித் தலைவர்கள், பிற அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முக்கியமான சட்டம் மற்ற மாகாணங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை அந்த மாகாணங்கள் மேற்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, இந்த மசோதாவுக்கு இஸ்லாமிய கவுன்சிலான சிஐஐ, இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிஐஐ உறுப்பினர் மவுலானா ஜலாலுதீன், “குடியரசு தலைவர் ஜர்தாரி சமூகத்தில் அராஜகத்தைத் தடுக்க வேண்டும். மசோதாவில் கையெழுத்திடக்கூடாது. சட்டமன்றம் புனித குர்ஆனுக்கு மேல் இருக்க முடியாது. இந்த மசோதா இஸ்லாமிய சட்ட(ஷரியா) விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, நமது சமூகத்தின் மதிப்புகள் மற்றும் மரபுகளுக்கும் முரணானது. குடும்ப அமைப்பை அழிப்பதற்கான மேற்கத்திய சதி இது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை தாக்கல் செய்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஷர்மிளா ஃபரூக்கி, “நாங்கள் திருமணங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதபோது, ​​தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாதபோது, ​​13 அல்லது 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்வது நியாயமற்றது என்று நாங்கள் கூறுகிறோம்.

18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமண விஷயத்திற்கு மத சாயம் கொடுக்கப்படக்கூடாது. மனித உரிமைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் இதனை பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் சொல்வது என்ன? – இந்த புதிய சட்டம் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயது 18 என நிர்ணயிக்கிறது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இச்சட்டத்தின்படி, எந்தவொரு மத அதிகாரியும் (நிகா கவான்) 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு திருமணத்தை நடத்திவைக்கக் கூடாது. மீறினால், அவருக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.100,000 அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு ஆணும், 18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்தால் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு, இதுபோன்ற வழக்குகளில் புகாரளிப்பவர்களின் பாதுகாப்பை சட்டம் உறுதி செய்கிறது. நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கும் போது யாராவது தங்கள் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்பினால், அவர்களின் ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version