பழ.நெடுமாறனின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
உலகத்தமிழ் பேரமைப்பின் நிறுவனரும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேற்று முகாம் அலுவலகம் சென்றார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் வெளியில் வந்து பழ.நெடுமாறனை வரவேற்று, கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா டிச.29-ம் தேதி சென்னையில் நடைபெறுவதாகவும், அவ்விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்றும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதாக உடனடியாக ஒப்புதல் அளித்ததுடன், கருணாநிதியின் நூற்றாண்டு விழா மலரை முதல்வர் வழங்கினார்.
அதன்பின், பழ.நெடுமாறனை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்த முதல்வர் ஸ்டாலின், காரில் வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின்போது, விழா ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் த.மணிவண்ணன், வே.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.