கொலோன் பல்கலை. நூலகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்: மூடப்பட்ட தமிழ்க் கல்விப் பிரிவு மீண்டும் திறக்கப்படுமா?

0
50

ஜெர்​மனி​யின் கொலோன் நகரில் பழம்​பெருமை வாய்ந்த கொலோன் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இதில் கலை மற்றும் சமூக​வியல் கல்​விப் புலத்​தின் கீழ் இந்​தி​ய​வியல் மற்​றும் தமிழ்க் கல்​விப் பிரிவு கடந்த 1963 முதல் செயல்​பட்டு வந்​தது. இத்துறை நிதிப் பற்​றாக்​குறை​யால் கடந்த வருடம் அக்​டோபர் 30-ம் தேதி​யுடன் மூடப்​பட்​டது. இதற்கு முன்​பும் இந்த தமிழ்ப் பிரிவு, 2 முறை மூடப்​படும் நிலைக்கு தள்​ளப்​பட்​டது.

கடைசி​யாக கடந்த 2021 ஜுலை​யில் கிடைத்த நிதி​யால் மூடப்​படும் நிலை​யி​லிருந்து தப்​பியது. இந்த நிதி, தமிழ்​நாடு அரசின் ரூ.1.25 கோடி, அமெரிக்​க​வாழ் இந்​தி​யர்​களின் ரூ.1.5 கோடி, ஐரோப்​பிய தமிழர் கூட்​டமைப்​பின் ரூ. 23 லட்​சம் ஆகியவை மூலம் அளிக்​கப்​பட்​டது. தமிழக அரசின் கவனத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தி ஈர்த்​த​தால் நிதி​யுதவி அளிக்​கப்​பட்​டது.

இந்த நிதி​யுத​வி​யால் ஸ்வென் வொர்ட்​மான் என்​பவர், ஒப்​பந்த முறை​யில் உதவிப் பேராசிரிய​ராக நியமிக்​கப்​பட்​டார். 2024 அக்டோபர் வரையி​லான இவரது பணிக்​காலத்​தில் புதி​தாக மாணவர் சேர்க்கை நடை​ பெற​வில்​லை.

இவருக்​குப் பிறகு, 60 வருடங்களாக செயல்​பட்ட தமிழ் துறையை கொலோன் பல்​கலைக்​கழகம் மூடியது. மூடப்​படு​வதற்கு முன், மீண்​டும் நிதி​கேட்டு தமிழ்​நாடு அரசின் தமிழ் வளர்ச்​சித் துறைக்கு உதவிப் பேராசிரியர் வொர்ட்​மான் கடிதம் எழு​தி​யிருந்​தார். இதற்கு தமிழ்​நாடு அரசு எந்த பதி​லும் தந்​த​தாகத் தெரிய​வில்​லை.

இந்​நிலை​யில், ஜெர்​மனி சென்​றுள்ள முதல்​வர் ஸ்டா​லின் நேற்று மாலை, கொலோன் பல்​கலைக்​கழகத்​திற்கு சென்​றார். அங்குள்ள கலை மற்​றும் சமூக​வியல் கல்​விப் புலத்​தின் கீழ் இந்​தி​ய​வியல் துறை​யிலுள்ள தமிழ்ப் பிரி​வின் நூல​கத்​தைப் பார்வையிட்​டார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜெர்​மனி​வாழ் தமிழர்​கள் வட்​டாரம் கூறும்​போது, “முதல்​வர் ஸ்டா​லின் பார்​வை​யிட்ட நூல​கம் தமிழகத்​திற்கு வெளியே உள்ள இரண்​டாவது பெரிய தமிழ் நூல​கம் ஆகும். இதில் சுமார் 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பழம்​பெரும் தமிழ் நூல்​கள், பழைய தமிழ் இதழ்​கள், தமிழ் ஓலைச்​சுவடிகள் உள்​ளன.

இவற்றை யாராவது பாது​காத்து ஆய்​வு​கள் செய்ய முன்​வந்​தால் அவர்​களிடம் அளிக்க கொலோன் பல்​கலைக்​கழகம் தயா​ராக உள்​ளது. தமிழ்ப் பிரிவு தொடரும் என எண்ணி நிதி அளித்த தமிழ்​நாடு அரசு உள்​ளிட்​டோர் அது மூடப்​பட்​டது குறித்து கேள்வி எழுப்​ப​வில்​லை. மீண்​டும் இந்த தமிழ் பிரிவை செயல்​படுத்த, அதில் ஒரு தமிழ் இருக்கை அமைத்​தால் திறக்​கப்​படும் வாய்ப்​பு​கள் உள்​ளன” என்று தெரி​வித்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here