ஓவிய, சிற்ப கலைஞர்கள் 6 பேருக்கு ‘கலைச் செம்மல்’ விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

0
458

மரபுவழி, நவீன பாணி ஓவிய, சிற்ப கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபுவழி மற்றும் நவீன பாணியில் திறமைமிக்க ஓவிய, சிற்பக் கலைஞர்கள் 6 பேருக்கு தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் ஆண்டுதோறும் ‘கலைச்செம்மல்’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், செப்பு பட்டயம், ரூ.1 லட்சம் விருது தொகை, பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான ‘கலைச் செம்மல்’ விருதுக்கு மரபுவழி ஓவிய பிரிவில் ஆ.மணிவேலு, சிற்ப பிரிவில் வே.பாலச்சந்தர், கோ.கன்னியப்பன், நவீன பாணி ஓவிய பிரிவில் கி.முரளிதரன், அ.செல்வராஜ், சிற்ப பிரிவில் நா.ராகவன் ஆகிய 6 கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு ‘கலைச் செம்மல்’ விருதுகளையும், விருதுக்கான செப்பு பட்டயம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ்களையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாட்டு துறை செயலர் க.மணிவாசன், கலை, பண்பாட்டு துறை இயக்குநர் கவிதா ராமு ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here