கச்சத்தீவு மீட்பு தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், பழனிசாமி காரசார விவாதம்

0
228

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தீர்மானத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது:

கச்சத்தீவு 1974-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தாரைவார்க்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சர்வதேச கடல் எல்லை மிகவும் சுருங்கியது. அடிக்கடி இலங்கை கடற்படை நமது மீனவர்களை கைது செய்வது, துப்பாக்கி சூடு நடத்துவது, மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவது என தொடர்ந்தது வருகிறது. நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது செல்லாது. அதை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2008-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். 2011-ல் கச்சத்தீவு தொடர்பான தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.

நானும் பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் கச்சத்தீவு குறித்து வலியுறுத்தி வந்தேன். இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளாக இப்பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுத்தது. 2019-ல் 38 திமுக எம்.பி.க்கள், 2024-ல் 39 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் எடுத்து சொன்னால்தான் தீர்வு கிடைக்கும்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக கச்சத்தீவை பயன்படுத்தி வந்தனர். நமது மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதுடன், அவர்களது படகு மற்றும் உடமைகளையும் சேதப்படுத்துகின்றனர். தற்போது சிறையில் இருந்து வெளிவராத சூழலை அந்நாட்டு அரசு ஏற்படுத்துகிறது. மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண வேண்டும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் 16 ஆண்டுகாலம் இருந்த திமுக கச்சத்தீவை பெறுவதற்கு முயற்சி எடுக்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர், ஆளுங்கட்சியை குறை சொல்கிறார். நீங்களும் 10 ஆண்டு ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளீர்கள். அப்போது என்ன செய்தீர்கள். 54 கடிதங்கள் அனுப்பியுள்ளோம். பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்துகிறோம். இப்போது நீங்கள் டெல்லி சென்றீர்களே, இதுபற்றி சொன்னீர்களா?

பழனிசாமி: நீங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏன் கேட்கவில்லை என்று தான் கேட்கிறேன்.

மு.க.ஸ்டாலின்: நீங்கள் பிரதமரிடம் பேசவில்லை என்று சொல்லவில்லை. நானும் பலமுறை பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.

பழனிசாமி: 16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள்.

துரைமுருகன்: வாஜ்பாய் அரசை ஏன் கவிழ்த்தீர்கள்.

பழனிசாமி: எங்களுடைய கோரிக்கையை ஏற்காத காரணத்தால், நாங்கள் வெளியே வந்தோம். உங்களால் வர முடிந்ததா.

மு.க.ஸ்டாலின்: இந்த தீர்மானத்தையொட்டிதான் பேச வேண்டும். அரசியல் ஆக்க வேண்டாம்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு: ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே, இந்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். திரும்ப திரும்ப மத்தியில் நீங்க இருந்தீர்கள், நாங்கள் இருந்தீர்கள் என சொல்லி கொண்டிருந்தால் பிரச்சினை வேறு விதமாக போகும்.

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி: இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் நீதிமன்றம் சென்றுள்ளார்.

பழனிசாமி: 2008 எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அப்போது இங்கேயும் ஆட்சியில் இருந்தீர்கள், மத்தியிலும் கூட்டணியில் இருந்தீர்கள். அப்போதெல்லாம் வழக்கில் இணையவில்லை.

மு.க.ஸ்டாலின்: தவறான தகவலை பதிவு செய்கிறார். தீர்மானத்தை நிறைவேற்றி தருவதற்கான வழிவகையை பேரவை தலைவர் காண வேண்டும். இல்லையென்றால் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு செல்லட்டும். அது அவர்கள் உரிமை.

பழனிசாமி: இது உணர்வுப் பூர்வமான பிரச்சினை. இது மீனவர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. நமது உரிமையை மீட்டு எடுப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here