Home மாநில செய்திகள் கலைவாணர் அரங்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

கலைவாணர் அரங்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

0

கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டில் பிறந்தார்.

சுடலை முத்துப் பிள்ளைகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கிருஷ்ணன் என்பதாகும். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக தயாரிப்பாளர், சினிமா தயாரிப்பாளர் என்ற புகழுடன் விளங்கியவர். அண்ணா, கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர். அறிவியல் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், சீர்திருத்த கருத்துகளைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துகளை வழங்கியது போல், தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கியவர். அவர் 1957 ஆக. 30 அன்று தனது 49-வது வயதில் காலமானார்.

இந்நிலையில், சென்னை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில், அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தைப் புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டினார் கருணாநிதி.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை தி.நகரில் வாணி மகாலுக்கு அருகில் 1969-ல் அப்போதைய முதல்வர் அண்ணாவால் திறக்கப் பட்டது. ஜி.என். செட்டி சாலையில் கட்டப்பட்ட மேம்பாலம் பணிக்காக, 2008-ல் சிலை அகற்றப்பட்டு பணிகள் முடிந்த பின், ஜி.என். செட்டி தெரு, திருமலைப் பிள்ளை சாலை சந்திப்பின் அருகில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர், அவரது சிலையை அவ்விடத்திலிருந்து அகற்றி, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதை யேற்று, முதல்வர் உத்தரவின்படி, என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்க வளாகத்தில் செய்தித் துறையால் ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டது. இதையடுத்து, சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் ஆர். பிரியா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர், செய்தித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version