அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், டெல்லிக்கு படையெடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக, அதிமுகவின் கொள்கை ஒன்றுதான். அதேபோல, காங்கிரஸ், பாஜகவின் கொள்கையும் ஒன்றுதான். இவர்களிடம் கொடிகள்தான் வெவ்வேறாக உள்ளன. கொள்கைகள் எல்லாம் ஒன்றாகதான் உள்ளன. இந்தக் கட்சிகளுக்கு மாற்று என்றால், புதிய தத்துவம், புதிய கருத்துகள்தான்.
இலவச கல்வி உரிமைச் சட்டம் உள்ளிட்ட தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்பதை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். அதை எடுத்துக்கூற வேண்டியது திமுக. ஆனால், 3 நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது மட்டும் ஏன் அந்த கூட்டத்துக்கு செல்கிறார்?.
அமலாக்கத் துறை ரெய்டு வந்தால் டெல்லிக்கு ஓடிச் சென்று பிரதமர் மோடியை முதல்வர் சந்திக்கிறார். இந்த நாட்டை நிர்வாகம் செய்வது சட்டமன்றம், நாடாளுமன்றமா அல்லது நீதிமன்றமா? எல்லா முடிவையும் நீதிமன்றம் தான் எடுக்கும் என்றால், சட்டமன்றம், நாடாளுமன்றம் எதற்கு? அவற்றை கலைத்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.