ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பணிகள் முடிவுற்ற அரசுத் துறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதில், ரூ.280.38 கோடி மதிப்பில் 47 முடிவுற்ற கட்டிடங்கள் மற்றும் நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் ரூ.497.06 கோடி மதிப்பிலான 5 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, ரூ.508 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், நகர்ப்புற பகுதிகளில் பட்டாக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில், முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆட்சேபகரமற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருக்கும் 214 நபர்களுக்கு நிலங்களை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீண்டகாலமாக, நகர்ப்புற பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தால் பல ஆயிரம் குடும்பங்கள் பயனடையும்.
தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், செய்யூரில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக, தனியார் முதலீட்டு திட்டங்கள் தமிழகத்துக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால், அதற்கு காரணம், நம்முடைய ஆட்சியின் மீதான நம்பிக்கை.
மும்மொழிக் கொள்கையை, அதாவது இந்தி, சம்ஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடியைத் தருவோம் என்று திமிராகப் பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தமிழகத்தின் கல்வி வளர்ச்சியையே மொத்தமாக அழித்து, ஒழித்துவிடும் என்பதால்தான் அதை எதிர்க்கிறோம்.
கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல், கல்வியில் இருந்து அவர்களை நீக்குவதற்கான அத்தனை செயல்திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன. அதனால்தான் அதை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம். தமிழகம் இவர்களின் சதிகளுக்கு எதிராக விடாமல் போராடுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள், அராஜகவாதிகள் என்று’ நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார்.
ஆனால், அரைமணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப்பெற வைத்திருக்கின்றனர் நமது தமிழக எம்.பி.க்கள். அதிமுக உறுப்பினர்கள்போல் பாஜக அரசுக்கு லாலி பாடாமல் தமிழகத்தின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம் என்று நிரூபித்திருக்கின்றனர். இதே போர்க்குணத்துடன் தமிழகத்துக்காக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இவ்விழாவில், க.பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், பாலாஜி, பாபு, வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா, மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.