‘கூட்டணி கட்சிகளின் ஆக பெரிய பலம்தான் திமுகவின் பலம்’ – இதை அக்கட்சியின் கூட்டணியில் உள்ள தலைவர்கள் நன்றாகவே உணர்ந்து, இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு வருகின்றனர்.
யாருக்கு எத்தனை சீட் என்பதைக் காட்டிலும், யாருக்கு எந்தத் தொகுதி என்பதில் பெரும் போட்டி தற்போதே நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் தொகுதியை தங்கள் வசம் பெற்று விட வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் தற்போதே தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவின் கே.ஏ.பாண்டியன், இத்தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கிறார். அதிமுக தரப்பில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் திமுக இத்தொகுதியை, தனது கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கியது. ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி போட்டியிட்டு தோல்வியடைந்தார். சிறுபான்மையின வாக்குகளை கவரும் திமுகவின் தீவிரப் போக்கு, தலித் வாக்குகள் போன்றவை தங்களுக்கு இத்தொகுதியில் இந்த முறை நிச்சயம் வெற்றியைத் தேடித் தரும் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது. ஏ.எஸ்அப்துல் ரஹ்மான் ரப்பானியை மீண்டும் போட்டியிட வைக்கலாம் என அப்பகுதியில் உள்ள அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இதற்காக சிதம்பரம் மற்றும் இஸ்லாமியர் சற்று அதிகமுள்ள பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் இதை தீர்மானங்களாக நிறைவேற்றி, அதனை கட்சியின் தலைமைக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். கட்சித் தலைவர் காதர் மொய்தீனும் இத்தொகுதியை கேட்டுப் பெறுவதில் தீவிரம் காட்டுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரி, தனது ஆதரவாளருக்கு சிதம்பரம் தொகுதியை பெற்றுத் தர ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அகில இந்திய தலைமைக்கு அழுத்தம் கொடுப்பது ஒருபுறம், திமுக தலைமையிடம் ‘சாப்ஃட் டச்’ கொடுப்பது மறுபுறம் என காய் நகர்த்துகிறார். இதற்கு மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் தனது சார்பில் முக்கிய நபர் ஒருவரை நிறுத்த, கட்சித் தலைமையிடம் கேட்டிருக்கிறார்.
கூட்டணிக் கட்சிகளின் மனப்போக்கு இப்படி இருக்கும் நிலையில், திமுகவின் எண்ணமோ வேறு மாதிரியாக இருக்கிறது. இத்தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு திமுக தரப்பில் நின்ற துரை. கி.சரவணன் வெற்றி பெற்றார்.அதன் பிறகு 2006, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் அதிமுக வெற்றி வாகை சூடியிருக்கிறது. இடையில் 2011-ல் அதிமுகவின் ஆதரவோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்றுள்ளது.
“மொத்தத்தில் கால் நூற்றாண்டாக இந்த சட்டப்பேரவைத் தொகுதி நம்மை விட்டு சென்று விட்டது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியும் கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. எனவே இந்த முறை நாம் சிதம்பரத்தில் போட்டியிட்டு வென்றே ஆக வேண்டும்” என்று இங்கிருக்கும் உடன்பிறப்புகள் உறுதிபட பேசுகின்றனர். கட்சித் தலைமைக்கும் அழுத்தம் தருகின்றனர். திமுக விட்டுக் கொடுக்குமா..? அல்லது ‘சிதம்பரம் இம்முறை எங்களுக்கே..!’ என்று வலிந்து பெற்றுக் கொள்ளுமா..? என்பது போகப்போகத் தெரியும்.













