சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமிநகரில் அமைந்துள்ள 955 வீடுகளை அகற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுப்புகளை தொடங்கினர்.
இதையொட்டி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை பயோமெட்ரிக் மூலம் கணக்கெடுக்கும் பணியையும் கடந்த 18-ம் தேதி முதல் அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்களுடன் குழந்தைகளும் பங்கேற்றனர்.
பல ஆண்டுகளாக தலைமுறை, தலைமுறையாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். அதனால் இந்த இடத்தை பட்டாவாக அரசு வழங்கவேண்டும். தொடர்ந்து நாங்கள் இங்கு வசிப்பதற்கான உறுதியை அரசு தரவேண்டும் என்றும், அந்த வகையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பை நிறுத்துவரை போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. போராடும் மக்களுக்கு ஆதரவாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தன. தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.
இந்நிலையில் போராட்ட களத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அமைச்சரிடம் எங்களுக்கான வேலையும், குழந்தைகள் படிப்பதற்கான சூழலும் இங்குதான் இருக்கிறது. எனவே எங்களால் அரசு ஒதுக்கித்தரும் வேறு குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்லமுடியாது. நீண்ட காலம் வசித்ததால், இதே பகுதியில் இருப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளச்சேரி ஏரியில் குடியிருப்பு வாசிகள் வசிக்கும் பகுதி 100 ஆண்டுகளுக்கு முன்பு நீர் ஆதாரமாக இருந்தது. இதையொட்டி உயர்நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளின் மூலம் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் காரணமாக இன்றைக்கு பயோமெட்ரிக் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பாதிக்காதபடி நடவடிக்கை: இந்த பணி முடிவடைந்தவுடன் அரசின் சார்பில் இந்த பகுதி மக்களுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு அளித்து, இந்த குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறோம். இந்த இடத்தில் குடியிருப்புகளை அகற்றிவிட்டு படகு குளம், பூங்கா போன்றவற்றை அரசு அமைக்க இருப்பதாக யாரும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.














