சென்னை | ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மமக நிர்வாகி மீது பாஜக புகார்

0
214

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது டிஜிபி அலுவலகத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோயில் அருகே கடந்த 15-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி தாம்பரம் யாகூப், பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால்கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: பம்மலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹெச்.ராஜாவுக்கு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் யாகூப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் 2 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் முன்னிலையிலே, பாஜக மூத்த தலைவரை 24 மணி நேரத்தில் கொலை செய்வேன் என்ற தொனியில் யாகூப் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி முதல் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் வரை அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் சொல்லும் அமைதியான தமிழ்நாடு இதுதானா? யாகூப் பேசியதை வீடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளித்துள்ளோம். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் இது தொடர்பான புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி வாக்குறுதி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here