அரசு உதவி வழக்கறிஞர் பணி தேர்வு முறையில் மாற்றம்: கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வு இடம்பெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

0
454

அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழி தாள் தேர்வும் இடம்பெறுகின்றன.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பொதுப்பணியில் உள்ள அரசு உதவி வழக்கறிஞர் (கிரேடு-2) பதவிக்கான புதிய தேர்வு திட்டம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுத் திட்டத்தின்படி, முதல்நிலைத் தேர்வில் சட்டம் தொடர்பான ஒரு தாளுடன் கூடுதலாக பொது அறிவு தாள் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், 2-வது கட்ட தேர்வான மெயின் தேர்வில் ஏற்கெனவே உள்ள சட்டம் தொடர்பான 4 தாள்களுடன் கூடுதலாக கட்டாய தமிழ்மொழி தகுதித் தாள் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது.சட்டம் தொடர்பான தாள்களைப் போன்று கட்டாய தமிழ் மொழி தேர்வும் விரிவாக விடையளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும். இதில் பெறும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்கு சேர்க்கப்படாது.

50 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2024 -ம்ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் (கிரேடு-2) பதவியில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான முதல்நிலைத்தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

861 பணியிடங்களுக்கு தேர்வு: இதற்கிடையே, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித் தகுதி) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

இதில், உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2,), வரைவாளர் (கிரேடு-3), விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், சிறப்பு மேற்பார்வையாளர், சர்வேயர், உதவி வேளாண் அலுவலர்,மேற்பார்வையாளர் (நெசவு), ஆவின் நிர்வாகி (ஆய்வகம்), ஏசிடெக்னீசியன் என பல்வேறு விதமான பதவிகள் இடம்பெற்றுள்ளன.

சில வகை பதவிகளுக்கு பாலிடெக்னிக் படிப்பும், சில பணிகளுக்கு ஐடிஐ-யும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பும் பணிக்கு ஏற்ப மாறுபடும். உரிய கல்வி, வயது வரம்பு தகுதிஉள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) செப்.11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவ.9 மற்றும் 11, 12, 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதர விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here