புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின. சுதந்திரத்துக்குப் பிறகு முழுமையாக சமூக கதைகளுக்குத் திரைப்படங்கள் மாறினாலும் சரித்திர, பக்திப் படங்களும் ஒரு பக்கம் தொடர்ந்து உருவாகி வந்தன. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘சக்ரதாரி’. கோரா கும்பரின் கதையை மையப்படுத்தி உருவான படம் இது.
கோரா கும்பராக சித்தூர் நாகையா நடித்தார். அவர் மனைவி துளசி பாயாக புஷ்பவல்லியும் சாந்தா பாயாக சூர்யபிரபாவும் நடித்தனர். நாகர்கோவில் மகாதேவன், எல்.நாராயண ராவ், கே.என்.கமலம், வரலட்சுமி, சுப்பையா பிள்ளை உட்பட பலர் நடித்தனர். அப்போது ஜெமினி ஸ்டூடியோவில், நடிப்பு மேற்பார்வையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஜெமினி கணேசன், பாண்டுரங்கனாக இதில் நடித்தார். ஆர்.கணேஷ் என்று அவர் பெயர் டைட்டிலில் இடம்பெற்றது. இதில் நடித்த புஷ்பவல்லிதான் ஜெமினி கணேசனின் 2-வது மனைவியாவார். இந்தி நடிகை ரேகாவின் தாய்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தை ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். வசனத்தை ஜெமினி கதை இலாகா பார்த்துக்கொண்டது. பாடல்களை பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்ரமணியன் எழுதினர். எம்.பார்த்தசாரதி இசை அமைத்தார். தம்பு (சி.வி.ராமகிருஷ்ணன்) ஒளிப்பதிவு செய்தார். 18 பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
கோரா கும்பர் மண்பாண்டம் செய்யும் குயவர். தீவிர பாண்டுரங்க பக்தரான இவர், மகாராஷ்டிராவில் சத்யபுரி என்ற கிராமத்தில் பிறந்தவர். ஒருநாள் பானை செய்வதற்காகக் களிமண்ணைக் கால்களால் துவைத்துக் கொண்டிருந்தபோது பக்தியால் பாடத் தொடங்கினார். மழை பெய்யத் தொடங்கியதும் பாடலை பாடிக்கொண்டே ஆடத் தொடங்கிவிட்டார். வெளியே சென்றிருந்த மனைவி துளசி, குழந்தை ஹரியை காணாமல் தேட, அதையும் மண்ணுக்குள் வைத்து கால்களால் மிதித்துக் கொன்றது கூட தெரியாமல் கோரா கும்பர் பக்தியில் திளைத்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது மனைவிக்கு.
தன் குழந்தையின் உயிர் போனதற்கு இந்த விட்டலன்தான் காரணம் என்று தெரிந்து, உலக்கையால் விட்டலன் சிலையை உடைத்து விட ஓடுகிறார், மனைவி. கோபமான கோரா கும்பர் கையில் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு, ‘விட்டலனை உடைத்தால், உன்னைக் கொல்வேன்’ என்று ஆவேசமானார். அதைக் கண்டு பயந்துபோன துளசி, ‘இனி வாழ்நாள் முழுவதும் என்னைத் தொடக் கூடாது’ என்றாள். சபதத்தை ஏற்றுக்கொண்டார் கோரா. துளசிபாய் ஒரு கட்டத்தில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவர் சகோதரி சாந்தா பாயை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுக்க வேண்டும் என நினைத்தார், அவர் தந்தை. கணவர், இனி தன்னைத் தொடமாட்டார். தங்கையை அவருக்கே திருமணம் செய்து கொடுத்தால் என்ன என்று நினைத்து, அப்பாவிடம் பேசி, அதன்படி அவருக்கே திருமணம் செய்து வைத்தார், துளசி பாய்.
அவரின் தந்தை, துளசியை போல இவரையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கோரா கும்பரிடம், சத்தியம் வாங்கிக் கொள்கிறார். துளசியை தொடமாட்டேன் என்று சபதம் செய்திருப்பதால் சாந்தாவையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒருநாள் இரவு துளசியும் சாந்தாவும் உறங்கிக்கொண்டிருந்த கோராவை மயக்குவதற்காக அவரின் கைகளைப் பிடித்து இழுக்கின்றனர். சபதத்தை மீறியதாக நினைத்த கோரா, தனது கைகளைத் துண்டித்துக் கொள்கிறார். பானை செய்ய வழியில்லாததால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உடனடியாக பகவான் பாண்டுரங்கனும், ருக்மிணியும் தம்பதியர் உருவில் வந்து அவர்கள் வீட்டிலே தங்கி சேவை செய்கின்றனர்.
வீட்டுக்கு வந்திருப்பது, தான் வணங்கும் பாண்டுரங்கன் என்பது ஒருநாள் தெரியவர, கோராவுக்கு வெட்டப்பட்ட கைகள் வந்துவிட்டன. இறந்த குழந்தையும் தவழ்ந்து வருகிறான் என்று கதை முடியும். இதே கதையுடன் 1940-ல் ‘பக்த கோரா கும்பர்’ என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் வெளியாகி இருக்கிறது. தமிழ், மட்டுமல்லாமல், மராத்தி, தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் இதே கதை படமாகி இருக்கிறது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் 1948-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது.














