கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு பணிக்கு மத்திய அரசு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
வயநாடு மறுவாழ்வுப் பணிக்கு, மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி பெறப்பட்டது என கேரள சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்எல்ஏ மொய்தீன் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது:
வயநாடு நிலச்சரிவுக்குப்பின் தயாரிக்கப்பட் மதிப்பீடு அறிக்கையின்படி, மறுவாழ்வு மணிக்கு ரூ.2,221 கோடி தேவை என மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த நிதியும் வரவில்லை.
வயநாடு நிலச்சரிவை கடும் இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்ததால், நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.க்களும், தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி வரை நிதியுதவி அளிக்க முடியும். இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் பெறப்பட்ட ரூ.712.98 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும். வயநாடு பகுதியை விட்டு வெளியே வசிக்க விரும்புபவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.














