சொத்துகளை ஆன்லைனில் பதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

0
142

சொத்துக்களை பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம், சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல், விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமானம் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது 117 ஆண்டு கால பத்திரபதிவு சட்டத்தை மாற்றும்.

சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் வரும் நில வளங்கள் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். பத்திரபதிவு சட்டம் நாடு முழுவதும் பொருந்தும் என்றாலும், மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆலோசித்து திருத்தம் செய்து கொள்ளலாம்.

மின்னணு பதிவு சான்றிதழ்களை வழங்கவும், டிஜிட்டல் ஆவணங்களை பராமரிக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மின்னணு ஆவணங்களை தாக்கல் செய்வதுடன், முறைகேடுகளை தவிர்ப்பதற்காக ஆதார் அடிப்படையில் அங்கீகாரத்துடன் சம்மதம் பெற்று பத்திரபதிவுகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு விரும்புகிறது. தகவல் பெறும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆவணங்கள் தொடர்பான இதர முகமைகளையும், ஒன்றிணைக்கு இந்த வரைவு மசோதா ஆலோசனை தெரிவித்துள்ளது.

சமீப காலமாக தொழில்நுட்ப பயன்பாடுகள் அதிகரித்து வருவது, சமூக – பொருளாதார நடைமுறைகள் மேம்பட்டு வருவது, பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவது போன்றவை முற்போக்கான பதிவு கட்டமைப்பை உருவாக்குவதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் பத்திரப்பதிவு மசோதா, கடந்த 117 ஆண்டு காலமாக பின்பற்றப்படும் பத்திரப்பதிவு சட்டத்தை மாற்றும் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here