வரும் 2026–27- க்கான மத்திய பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்லியில் இன்று மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். இதற்காக, நேற்று கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட் திசையற்றது, தொலைநோக்குப் பார்வையற்றது, செயலற்றது. இது பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு எதிரானது. குறிப்பாக மேற்கு வங்கத்துக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இல்லை.
தேர்தலில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் பொருளாதார ரீதியாக வங்கத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். மத்திய பட்ஜெட் பொய்களின் குவியலாக உள்ளது. ஜிஎஸ்டி மூலம் மேற்கு வங்கத்திலிருந்து வருவாயைப் பெறும் மத்திய அரசு, மாநிலத்திற்கு அதை திருப்பித் தருவதில்லை. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அறிவித்த டன்குனி – சூரத் சரக்கு வழித்தடத் திட்டம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. இது ஒரு மக்கள் விரோத வெற்று பட்ஜெட். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
திரிணமூல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், “81 நிமிட பட்ஜெட் உரையில் மேற்கு வங்கம் என்ற பெயரே இடம் பெறவில்லை. மத்திய அரசு மேற்கு வங்க மக்களை வங்க தேசத்தவர்களாகப் பார்க்கிறதா? 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.



