Home மாநில செய்திகள் சென்னையில் டிச.26-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா!

சென்னையில் டிச.26-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா!

0

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் கான்பூரில், கடந்த 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். கட்சி தொடங்கப்பட்டது முதல், நாட்டின் விடுதலைக்காக போராடியது. அதைத்தொடர்ந்து உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிகளற்ற, வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காக இன்றும் போராடி வருகிறது .

இவ்வாறு அளப்பரிய தியாகங்களை செய்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி அதன் நிறைவு விழா டிச.26-ம் தேதி தி.நகர் பாலன் இல்லத்தில் நடைபெற உள்ளது. விழாவில் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்து நடத்தப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 75 வயதை கடந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்த அமீர் ஹைதர் கானின் 36-வது நினைவுநாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் கே.டி.கே.தங்கமணியின் 24-வது நினைவுநாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வும், செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற உள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version