வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மனுதாரர் தரப்பு மார்ச் 10-ம் தேதிக்குள் பதில் அளி்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பரில் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்ஸ் ரவீ்ந்திரன் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரர் மார்க்ஸ் ரவீந்திரன் தரப்பு வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி: சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை முடிந்து, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக கடந்த ஜனவரி 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முத்துக்காடு பஞ்சாயத்து தலைவர் பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டரான சண்முகத்தை பணிநீக்கம் செய்துள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில், பஞ்சாயத்து தலைவரின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொய்யான தகவலை முரளிராஜா என்பவர் பரப்பியுள்ளார். இதையடுத்து, முத்துகிருஷ்ணனும், சுதர்சனும் குடிநீர் தொட்டியில் ஏறி பார்ப்பதுபோல சென்று, இந்த குற்ற சம்பவத்தை செய்துள்ளனர் என்று சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனுதாரரின் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி: இந்த வழக்கையே நீர்த்துப்போக செய்யும் விதமாக, குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக புகார் அளித்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த 3 பேர் மீதே தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. இவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. உண்மையில், குடிநீர் தொட்டி ஆபரேட்டரான மாற்று சமூகத்தை சேர்ந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததற்கு வேங்கைவயல் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பஞ்சாயத்து தலைவரின் கணவருடைய தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆனால், சிபிசிஐடி போலீஸார் முறையாக இந்த வழக்கை புலன் விசாரணை செய்யவில்லை. ஒருநபர் ஆணையமும் இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை. எனவே, அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க அவகாசம் தரவேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், மனுதாரர் இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது. அதேநேரம், குற்றப்பத்திரிகையில் அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசின் அறிக்கைக்கு மனுதாரர் தரப்பு மார்ச் 10-ம் தேதிக்குள் பதில் அளி்க்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.













