நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள படம், ‘பராசக்தி’ ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜன. 10-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, இணை இயக்குநரான ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் இந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி 2010-ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ‘பெண் சிங்கம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது அவரிடம் இந்த கதையை தெரிவித்தேன்.
அவரது ஆலோசனையின்பேரில் இந்த கதையை எழுதினேன். அதன்பிறகு இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன். இந்நிலையில் என்னுடைய ‘செம்மொழி’ கதைக்களத்தை அப்படியே திருடி ‘பராசக்தி’ என்ற பெயரில் படத்தைத் தயாரித்துள்ளனர். இதுதொடர்பாக திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனது கதையையும், பராசக்தி கதையையும் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும். அதுவரை பராசக்தி படத்தை வெளியிடதடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு விடுமுறை கால அமர்வில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பராசக்தி படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியனும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியனும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இந்தப் படத்துக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, இதுதொடர்பாக பராசக்தி தயாரிப்பு நிறுவனமும், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஜன.2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.







