உருட்டு கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரம்: சீமான் உட்பட 180 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

0
126

தாக்குதல் நடத்தும் நோக்கில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றிருந்த விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 180 பேர் மீது நீலாங்கரை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சீமானுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 22-ம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

திட்டமிட்டபடி அன்றைய தினம் காலை 11 மணியளவில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிடர் விடுதலைக் கழகம் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்பினர் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.

அவர்கள் சீமான் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி முன்னோக்கிச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர்களை காவல் வாகனத்தில் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தினர்.

முன்னதாக, இந்த முற்றுகை போராட்டத்தை அறிந்து நாம் தமிழர் கட்சியினர், சீமான் வீட்டு முன்பு அரணாக குவிந்தனர். அதில், 100-க்கும் மேற்பட்டோர் கையில் கம்பு, உருட்டு கட்டைகளுடன் சீமான் வீட்டருகே தாக்குதல் நடத்தும் நோக்கில் தயார் நிலையில் நின்றனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரும் மோதிக் கொள்ளாத வகையில் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், உருட்டுக் கட்டைகளுடன் நின்ற விவகாரம் குறித்து நீலாங்கரை போலீஸார் சட்ட விரோதமாக கூடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 180 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். இந்த வழக்கில் சீமான் பெயரும் சேர்க்கப்பட்டது. இதேபோல், தடையை மீறி போராட்டம் நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here