மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளாக அந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் 2-வது மனைவியின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகியோர் அந்த சொத்துக்கு உரிமை கோரியும், சொத்தில் பங்கு கேட்டும் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், முழுமையான விசாரணைக்குப் பிறகே சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி போனி கபூர் மற்றும் அவரது மகள்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘அந்த சொத்தை சட்டப்படி விலைக்கு வாங்கி அனுபவித்து வரும் நிலையில் போலி வாரிசு சான்றிதழ் மூலமாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிலர் உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, “ஏற்கெனவே ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு எதிராக இந்த சொத்தில் பங்கு கேட்டு நடராஜன் மற்றும் சிவகாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அவர்கள் சொத்தை அபகரிக்கும் நோக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையதல்ல” என்று கூறி அந்த வழக்கை நிராகரித்தும், செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
