சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஓரணியில் திரட்டி தக்க வைத்திருக்கும் திமுக, தங்களின் கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்திருக்கும் தவெகவையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைத்திருப்பதன் பின்னணியில் பல அரசியல் கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தங்களின் கொள்கை எதிரி என்று அறிவித்திருப்பதை உறுதிப்படுத்த தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக தவெக இதை மாற்றிக் கொள்ள முயலும்.
ஏற்கெனவே மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகூட்டத்தில் அக்கட்சி கலந்து கொண்டது. அதேபோல், எஸ்ஐஆர் தொடர்பான இந்தக் கூட்டத்திலும் தவெக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என்று திமுக எதிர்பார்க்கிறது. அப்படி கலந்து கொண்டால், தமிழக நலனுக்கு எதிராக எதுவும் நடந்தால் தங்களை கடுமையாக எதிர்க்கும் கட்சியுடனும் நாங்கள் கைகோத்து மாநிலத்தின் நலனைக் காப்போம் என்று காட்டிக்கொள்ள திமுக முயலும்.
அதேசமயம், நாங்கள் பாஜக, அதிமுகவை தவிர அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டி விட்டோம். உங்களுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் நிற்கின்றன என்று பாஜக கூட்டணிக்கு சவால் விடும் வாய்ப்பாகவும் திமுக இதைப் பயன்படுத்தலாம். ஒருவேளை, அனைத்துக் கட்சிகூட்டத்தை தவெக புறக்கணித்தால், “நாங்கள் முன்பே சொன்னதுபோல் பாஜகவின் மறைமுக ஆதரவில் தான் தவெக செயல்படுகிறது” என்று மக்கள் மன்றத்தில் திமுக பிரச்சாரம் செய்யும்.
இன்னொரு பக்கம், கரூர் விவகாரத்தை முன்வைத்து விஜய்யை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கும் அதிமுக கூட்டணி, அதில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதையும் இதன் மூலம் கணிக்க கணக்குப் போடுகிறது திமுக. கூட்டத்தில் தவெக பங்கெடுத்தால் அதிமுக கூட்டணிக்குச் செல்வது குறித்து அந்தக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதும் திமுகவின் தந்திரம்.
இப்படி, அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக தவெக எத்தகைய முடிவை எடுத்தாலும் அதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திட்டத்தில் தான் அவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. திமுக வைத்திருக்கும் இந்த டெஸ்ட்டில் தவெக என்ன ட்விஸ்ட் வைக்கப் போகிறது என்பதை 2-ம் தேதி பார்க்கலாம்.
 
            

