மாநகராட்சி வசூலிக்கும் வணிக உரிம கட்டணத்தை ரூ.1000 ஆக குறைக்க வேண்டும் என்று ஆணையரிடம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் தலைமையில் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை நேற்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில் வணிக உரிம கட்டணம் ரூ.650-லிருந்து ரூ.3,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மேலும், 3 ஆண்டுக்கான உரிம கட்டணத்தை இப்போதே செலுத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் நிர்பந்திக்கின்றனர். மாநகராட்சி அமலாக்க அதிகாரிகள் கடைகளின் முன்பு குப்பைகள் உள்ளது, கழிவுகள் உள்ளது என சொல்லி ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அடாவடியாக அபராதம் வசூல் செய்கிறார்கள்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வணிகர்கள் வணிகம் செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் வணிக உரிம கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இருப்பதுடன், அதை 3 ஆண்டுகளுக்கு இப்போதே செலுத்துமாறு அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் வணிகர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதிகாரிகள் கெடுபிடி: பாதிக்கப்பட்ட வணிகர்கள் பலர் சில்லறை வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சில்லறை வணிகம் அடியோடு அழிந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வணிக உரிம கட்டணத்தை ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும். ஓராண்டுக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை அமலாக்க அதிகாரிகளின் கெடுபிடி வசூலை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, பேரவையின் பொதுச்செயலாளர் வெ.மெஸ்மர் காந்தன், வழிகாட்டு குழு தலைவர் ஷேக் அகமது, மண்டல தலைவர் வில்லியம், செய்தித்தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, மத்திய சென்னை மாவட்ட தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.














