அண்ணா மேம்பாலத்தில் இருந்து பேருந்து விழுந்த வழக்கு: ஓட்டுநரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு

0
216

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அரசு மாநகரப் பேருந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில், அந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநரை விடுதலை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 27 அன்று பிராட்வேயில் இருந்து வடபழனி நோக்கிச்சென்ற மாநகர அரசுப் பேருந்து அண்ணா மேம்பாலத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 38 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி பஜார் போக்குவரத்து போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான குன்றத்தூரைச் சேர்ந்த பிரசாத்(48) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை 4-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் ஆர். சுப்ரமணியன் முன்பாக நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் பிரசாத் சார்பி்ல் வழக்கறிஞர் ஆர்.ஒய். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி இந்த விபத்து ஓட்டுநரின் அஜாக்ரதையாலோ அல்லது அதிவேகத்தாலோ ஏற்படவில்லை.

வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் இருக்கை திடீரென கழன்று ஸ்டியரிங் லாக் ஆகி, தொழில்நுட்ப காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது, என வாதிட்டார். அதையடுத்து குற்றவியல் நடுவர், அரசுப் பேருந்து ஓட்டுநரான பிரசாத்தை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். ஓட்டுநர் பிரசாத்தின் பணி நீக்க உத்தரவை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here