கருணாநிதி பெயரில் அரங்கம் அமைப்பது வீண் ஆடம்பரம்: சீமான் விமர்சனம்

0
209

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்துக்காக விரயம் செய்வதாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் ரூ.525 கோடியில் ‘கருணாநிதி பன்னாட்டு அரங்கம்’ அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையின் பெயரில் அரங்கம் அமைக்க மக்களின் வரிப்பணம் ரூ.525 கோடியை வாரி இறைப்பது எவ்வகையில் நியாயம்?

அரசு பள்ளிகளை சீரமைக்க நிதியில்லை. தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும், அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவும் பணமில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வழியில்லை. பொங்கல் பண்டிக்கைக்கு ஆயிரம் ரூபாய் வழங்க கூட பணம் இல்லாத அளவுக்கு நெருக்கடியான நிதிச்சூழல்.

இந்நிலையில் ஆடம்பரமான அரங்கம் தேவையா, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என கூறும் திமுக அரசுக்கு மக்களின் வரிப்பணத்தை வீண் ஆடம்பரத்துக்காக இப்படி விரயம் செய்ய மட்டும் நிதி இருக்கிறதா, நல்லாட்சி என்பது மக்களின் மனதில் நீங்காது நிலைபெற வேண்டும். தவிர வலிந்து திணிக்கப்படக் கூடாது. இதுபோன்ற வீண் விரய விளம்பர அடையாளங்கள் நீண்டகாலம் நிலைக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here